சென்னை: சென்டரல் ரயில் நிலையத்தில் உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட ரூ.1.25 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி மற்றும் பணத்தை ரயில்வே போலீஸார் பறிமுதல் செய்தனர்.
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படையினர் வழக்கம்போல் நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நள்ளிரவு 12.10 மணியளவில் பெங்களூருவில் இருந்து சென்னை வந்த லால்பாக் எக்ஸ் பிரஸ் ரயில் பயணிகளிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது ஒருவரிடமிருந்து ரூ.47.52 லட்சம் மதிப்பிலான 288 கிராம் எடையுள்ள 4 தங்கக் கட்டிகள், ரூ.29.40 லட்சம் மதிப்பிலான 10 கிலோ எடைகொண்ட ஒரு வெள்ளிக்கட்டி ஆகியவை கைப்பற்றப்பட்டன.
இந்த பொருட்களுக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் ரயில்வே போலீஸார் இவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் தங்கம் கடத்தி வந்த நபர் கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பது தெரியவந்தது.
இதேபோல நேற்று மதியம் 1 மணியளவில் விஜயவாடாவில் இருந்து சென்ட்ரல் வந்த பினாகினி அதிவிரைவு ரயில் பயணிகளிடம் சோதனை செய்த போது பயணி ஒருவரிடம்இருந்து உரிய ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட ரூ.48.59 லட்சம் பணத்தை ரயில்வே போலீஸார் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் அந்த நபர் ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பது தெரியவந்தது. இதையடுத்து பறிமுதல் செய்த பொருட்களையும், கடத்தலில் ஈடுபட்ட இருவரையும் ரயில்வே போலீஸார் வருமான வரித் துறையினரிடம் ஒப்படைத்தனர்.