புதுக்கோட்டை: டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரின்பேரில், புதுக்கோட்டை மாவட்ட டாஸ்மாக் மேலாளர் சி.கேசவன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
டாஸ்மாக் கடைகளில் அன்றாடம் விற்பனையாகும் மதுபானங்களின் இருப்பு விவரங்களின் அடிப்படையில், கணினி மூலம் தானாகவே மதுபான ஆர்டர்கள் தயாராகும் நடைமுறை தற்போது அமலில் உள்ளது. இந்தப் பட்டியல் அந்தந்த மாவட்ட மேலாளர்களின் ஒப்புதலைப் பெற்ற பின்னரே, கடைகளுக்கு விநியோகம் செய்யப்படுகின்றன.
இந்நிலையில், சி.கேசவன் தருமபுரி மாவட்ட டாஸ்மாக் மேலாளராக பணியாற்றியபோது, தனக்கு சாதகமான குறிப்பிட்ட மதுபான உற்பத்தியாளர்களுக்கு அதிக ஆர்டர்களை வழங்கியுள்ளார். இந்த முறைகேடு அண்மையில் டாஸ்மாக் தணிக்கை துறை ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனிடையே, கடந்த வாரம்புதுக்கோட்டை மாவட்ட டாஸ்மாக் மேலாளராக கேசவன்பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், அவரை சஸ்பெண்ட் செய்து மேலாண்மை இயக்குநர் கே.நந்தகுமார் ஜூலை 3-ல் உத்தரவிட்டார்.