பிரதிநிதித்துவப் படம்
புதுச்சேரி: போலி மருந்துகள் உற்பத்தி தொடர்பான வழக்கின் ஆவணங்கள், அறிக்கை கோப்புகள் புதுச்சேரி சிபிசிஐடி தரப்பில் இருந்து சிபிஐ வசம் ஆன்லைன் வழியே அனுப்பப்பட்டது. இதற்கான விசாரணைக்காக சிபிஐ விரைவில் புதுச்சேரியில் தற்காலிக அலுவலகத்தை திறக்கிறது.
புதுச்சேரியில் போலி மருந்துகளை உற்பத்தி செய்து, நாடு முழுவதும் 16 மாநிலங்களில் பல ஆயிரம் கோடிக்கு விற்பனை செய்தது கண்டறியப்பட்டது. போலி மருந்து தொழிற்சாலை மற்றும் 10-க்கும் மேற்பட்ட குடோன்களில் புதுச்சேரி சிபிசிஐடி போலீஸார் சோதனை நடத்தி, சீல் வைத்தனர். அங்கிருந்த நவீன இயந்திரங்கள், பல கோடி மதிப்புள்ள மருந்துகள், மூலப்பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
போலி மருந்து தொழிற்சாலை உரிமையாளர் ராஜா, பங்குதாரர் மணிகண்டன், உதவி செய்த ராணா, மெய்யப்பன், ஊழியர்கள் என 26 பேரை கைது செய்தனர். இதில் ஜிஎஸ்டி வரி மோசடிக்கு உதவி செய்த விருப்ப ஓய்வு பெற்ற ஐஎப்எஸ் அதிகாரி சத்தியமூர்த்தியும் கைது செய்யப்பட்டார்.
போலி மருந்துகள் உற்பத்தி தொழிற்சாலையில் இருந்து பல மாநிலங்களுக்கு தொடர்பு, பண பரிவர்த்தனை, ரசாயன மூலப்பொருட்கள் கொள்முதல் நடந்திருப்பதால் இந்த வழக்கை சிபிஐ, தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பரிந்துரை செய்தார்.
இதனிடையே போலி மருந்து தொழிற்சாலையின் உரிமையாளர் ராஜாவை ஒரு வாரம் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீஸார், சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரித்தனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. வழக்கில் தொடர்புடைய அரசியல் கட்சியினர், அதிகாரிகள், பார்மசிஸ்ட் என 60 பேர் கொண்ட பட்டியலை சிபிசிஐடி போலீஸார் தயாரித்தனர். கடந்த வாரத்தில் இந்த விசாரணையை சிபிசிஐடி போலீஸார் முடித்துக் கொண்டனர்.
இதையேற்று மத்திய உள்துறை அமைச்சகம் சிபிஐ விசாரணைக்கு ஏற்றது. தொடர்ந்து விசாரணை அறிக்கை, ஆவணங்கள் அடிப்படையில் 60 பேர் கொண்ட பட்டியலை தயாரித்தனர். இவற்றை புதுச்சேரி சிபிசிஐடி போலீஸார் ஆன்லைன் மூலம் சிபிஐக்கு அனுப்பியுள்ளனர்.
இதையடுத்து வரும் 6-ம் தேதி முதல் சிபிஐ அதிகாரிகள் புதுச்சேரிக்கு வந்து விசாரணையை தொடங்க இருக்கின்றனர். இந்த வழக்கில் புதுச்சேரியில் பலருக்கும் சம்மன் அனுப்பி விசாரிக்க வேண்டியுள்ளது. இதற்காக தற்காலிகமாக சிபிஐ அலுவலகம் ஒன்று புதுச்சேரியில் விரைவில் திறக்கப்பட உள்ளது.