கோவை: துடியலூர் அருகே இளம் பெண் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில், அவரது ஆண் நண்பரான தனியார் பள்ளி பேருந்து ஓட்டுநரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
கோவை துடியலூர் அருகேயுள்ள வட்டமலைப்பாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரிக்கு பின்புறம் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில், எரிந்த நிலையில் பெண் சடலம் கிடப்பதாக கடந்த 18-ம் தேதி இரவு துடியலூர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
காவல் ஆய்வாளர் தவசியப்பன் தலைமையிலான போலீஸார் அங்கு சென்று பார்த்தபோது, இளம் பெண் எரித்துக் கொல்லப்பட்டது தெரியவந்தது. பெண்ணின் உடலை மீட்ட போலீஸார், பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், வழக்கில் தொடர்புடைய நபர்களைப் பிடிக்க மாநகர காவல் ஆணையர் என்.கண்ணன் உத்தரவின் பேரில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை நடத்தினர்.
முதல்கட்ட விசாரணையில், எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண், துடியலூர் அருகேயுள்ள செங்காளி பாளையம் பகுதியைச் சேர்ந்த அனிதா (32) என்பதும், திருமணமான இவருக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளதும், கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து வசித்து வருவதும் தெரியவந்தது.
தொடர் விசாரணையில், துடியலூர் அருகே செங்காளி பாளையம் பகுதியில் வசித்து வரும் தமிழ்செல்வன்(29) என் பவருக்கு இவ்வழக்கில் தொடர்பு இருப்பதைப் போலீஸார் கண்டறிந்தனர். அவரைப் பிடித்து போலீஸார் விசாரித்தபோது, அனிதாவை தாக்கி, பெட்ரோல் ஊற்றி எரித்ததை தமிழ்செல்வன் ஒப்புக் கொண்டார்.
இதையடுத்து போலீஸார் தமிழ்செல்வனை நேற்று கைது செய்தனர். இது தொடர்பாக போலீஸார் கூறியதாவது: தமிழ்செல்வனுக்கு ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் திருமணமாகியுள்ளது. தற்போது அவர் மனைவி கர்ப்பமாக உள்ளார். துடியலூரில் உள்ள தனியார் பள்ளியில், பேருந்து ஓட்டுநராக தமிழ்செல்வன் பணியாற்றி வந்துள்ளார்.
அப்பள்ளியில் அனிதாவின் குழந்தை படித்து வந்துள்ளார். குழந்தையை பள்ளிக்கு அழைத்துச் சென்று வரும்போது, அனிதாவுக்கும், தமிழ்செல்வனுக்கும் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து இருவரும் பழகி வந்துள்ளனர். இதில் அனிதா கர்ப்பமடைந்ததால், தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு தமிழ்செல்வனிடம் கூறியுள்ளார்.
ஆனால், கருவைக் கலைத்துவிடலாம் என்று தமிழ்செல்வன் கூறியுள்ளார். அதற்கு அனிதா ஒப்புக் கொள்ளாததால் ஆத்திரமடைந்த தமிழ்செல்வன் அனிதாவை கட்டையால் தாக்கி கொலை செய்துவிட்டு, அவரது உடலை பெட்ரோல் ஊற்றி எரி்த்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரித்து வருகிறோம். இவ்வாறு போலீஸார் தெரி வித்தனர்.