தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலஸ்தான உண்டியலில் பணம் திருடிய கோயில் அர்ச்சகர் உள்ளிட்ட 2 பேரை கோயில் போலீஸார் கைது செய்தனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் தங்கள் காணிக்கையை செலுத்துவதற்காக, உள்பிரகாரம், சண்முக விலாசம் மண்டபம் என 43 இடங்களில் நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. உண்டியல்கள் மாதந்தோறும் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணப்படுவது வழக்கம்.
இந்நிலையில், கோயில் அர்ச்சகர் முத்தன் அய்யர் (65) என்பவர் மூலஸ்தானம் முன்புறமுள்ள உண்டியலில் கடந்த 2, 5, 8 ஆகிய தேதிகளில், உண்டியலில் கைவிட்டு திருடிய சம்பவம் கோயில் சிசிடிவி கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், புதுச்சேரி ஆர்யாகுப்பத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (58) என்பவரும் கடந்த 18-ம் தேதி கொடிமரம் முன்பு உள்ள உண்டியலுக்குள் துணியைச் சுருட்டி வைத்துள்ளார். பக்தர்கள் அந்த உண்டியலில் காணிக்கை செலுத்திய பின்னர், அந்தத் துணியை வெளியே எடுத்து காணிக்கை பணத்தை திருடிச் சென்றுள்ளார். இதுவும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
கோயில் உள்துறை கண்காணிப்பாளர்கள் கொடுத்த புகாரின் பேரில், திருச்செந்தூர் கோயில் போலீஸார் வழக்கு பதிவு செய்து முத்தன் அய்யரையும், ராமகிருஷ்ணனையும் கைது செய்தனர். இதுதொடர்பாக போலீஸார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.