காளிராஜ் கொலை செய்யப்பட்ட தனியார் தினசரி சந்தையில் போலீஸார் விசாரணை நடத்தினர்.
கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே திட்டங்குளத்தில் செயல்பட்டு வரும் தனியார் தினசரி சந்தையில் தூங்கிக் கொண்டிருந்த சுமை தூக்கும் தொழிலாளி இன்று (அக்.27) அதிகாலை கொலை செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளி காளிராஜ் (40). இவர் கோவில்பட்டி அருகே திட்டங்குளத்தில் செயல்பட்டு வரும் தனியார் தினசரி சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
நேற்றிரவு வழக்கம் போல் தனியார் தினசரி சந்தையில் உள்ள ஒரு கடையில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மற்றொரு சுமை தூக்கும் தொழிலாளியான கோவில்பட்டி அருகே உள்ள அஞ்சுராமன்பட்டியைச் சேர்ந்த சின்னத்துரை (40) என்பவர், காளிராஜை கோடாரியால் தாக்கினார். இதில் காளிராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தொடர்ந்து சின்னத்துரை கோவில்பட்டி அருகே கொப்பம்பட்டி காவல் நிலையத்துக்கு சென்று சரணடைந்தார்.
கொப்பம்பட்டி போலீஸார் அவரை கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து கிழக்கு காவல் நிலைய போலீஸார், தனியார் சந்தைக்கு சென்று காளிராஜின் சடலத்தை மீட்டு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், தனியார் சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளிகளாக வேலை பார்த்த காளிராஜும் சின்னத்துரையும் அடிக்கடி ஒருவரை ஒருவர் கேலி கிண்டல் செய்து வந்துள்ளனர். இதில் கடந்த சனிக்கிழமை (24-ம் தேதி) இருவரும் கேலி பேசிக் கொண்டிருந்தபோது தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது காளிராஜ், சின்னத்துரையை தாக்கி கீழே தள்ளி உள்ளார். இதனால் அவர் மீது விரோதத்தில் இருந்த சின்னத்துரை, தனியார் சந்தையில் இன்று அதிகாலை தூங்கிக் கொண்டிருந்ததை காளிராஜை கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட காளிராஜூக்கு கனகவல்லி என்ற மனைவியும் கவி மாதேஷ் (2) என்ற மகனும் உள்ளனர். மேலும், இவர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.