காஞ்சிபுரம்: பரந்தூர் பசுமைவெளி விமான நிலையத் திட்டத்துக்காக நிலத்தை அளவீடு செய்ய ரூ.50,000 லஞ்சம் வாங்கிய நில அளவையரை காஞ்சிபுரம் ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸார் நேற்று கைது செய்தனர்.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ரஞ்சித் குமார் என்பவருக்குச் சொந்தமான நிலம் பரந்தூர் பகுதியில் உள்ளது. இந்தப் பகுதி பசுமைவெளி விமான நிலையத் திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட உள்ள நிலையில், தனது நிலத்தை அளவீடு செய்து தருமாறு ரஞ்சித் குமார் விண்ணப்பித்திருந்தார்.
இதற்காக, பரந்தூர் விமான நிலைய திட்ட நில எடுப்பு அலுவலகத்தில் நில அளவையராகப் பணியாற்றி வரும் சுந்தர வடிவேலு (46) என்பவரை அவர் அணுகியுள்ளார்.
நிலத்தை அளவீடு செய்ய சுந்தர வடிவேலு ரூ.50,000 லஞ்சம் தருமாறு ரஞ்சித் குமாரிடம் கேட்டுள்ளார். நிலத்தை அரசிடம் ஒப்படைக்கும் நிலையிலும் லஞ்சம் கேட்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்த ரஞ்சித் குமார், இது குறித்து காஞ்சிபுரம் ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்தார்.
போலீஸாரின் அறிவுறுத்தலின்படி, ரசாயனம் தடவிய ரூ.50,000 பணத்தை ரஞ்சித் குமார் நேற்று காஞ்சிபுரம் செங்கழுநீரோடை வீதியில் உள்ள சூப்பர் மார்க்கெட் அருகே சுந்தர வடிவேலுவிடம் கொடுத்துள்ளார்.
அப்போது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு டிஎஸ்பி கலைச்செல்வன், இன்ஸ்பெக்டர்கள் கீதா, தேவநாராயணன் மற்றும் போலீஸார், லஞ்சப் பணத்தை பெற்ற சுந்தர வடிவேலுவை கைது செய்தனர். அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தனர்.