மணிகண்டன், ஸ்ரீதர்
சென்னை: பட்டாக்கத்தியுடன் காரில் சுற்றித் திரிந்த ரவுடியை பிடிக்க முயன்ற போலீஸ் எஸ்ஐ மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த விவகாரத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கே.கே.நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ‘பி’ பிரிவு ரவுடியான ‘நாய்’ மணிகண்டன் (33), தனது நண்பர்களுடன் பட்டாக்கத்தி ஏந்தியபடி காரில் சுற்றித்திரிவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கே.கே.நகர் சிறப்பு உதவி ஆய்வாளர் பழனி (48), தலைமைக் காவலர் நித்தியானந்தம் ஆகியோர் அங்கு விரைந்து சென்றனர்.
அப்போது காரில் வந்த மணிகண்டன், போலீஸார் மீது காரை மோதுவதுபோல் ஓட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. பின்னர் காரை நிறுத்திய அவர், வாகனத்தில் வைத்திருந்த பட்டாக்கத்தியை எடுத்து தாக்க முயன்றார்.
உடனே சிறப்பு உதவி ஆய்வாளர் பழனி, மணிகண்டனை மடக்கிப் பிடித்து பட்டாக்கத்தியை பறிக்க முயன்றபோது இருவருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன், சிறப்பு உதவி ஆய்வாளர் பழனியை தாக்கினார்.
பின்னர் மணிகண்டன் மற்றும் அவரது கூட்டாளிகள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். காயமடைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பழனி, கே.கே.நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இது ஒருபுறம் இருக்க சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் பட்டாக்கத்தியை போலீஸார் பறிமுதல் செய்தனர். பின்னர் போலீஸாரை பணி செய்யவிடாமல் தடுத்தது, அரசு ஊழியரை தாக்கியது, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கே.கே.நகர் போலீஸார் விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து தலைமறைவாக இருந்த மணிகண்டன், அவரது நண்பர் ஸ்ரீதர் (26) ஆகிய இருவரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் 2 கூட்டாளிகளை தனிப்படை அமைத்து போலீஸார் தேடி வருகின்றனர்.