க்ரைம்

கொலை வழக்கில் தேடப்பட்ட நெய்வேலி ரவுடியை சுட்டுப்பிடித்த போலீஸார்

செய்திப்பிரிவு

கடலூர்: நெய்வேலியில் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடியை போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.

கடலூர் மாவட்டம், நெய்வேலியில் கடந்த 16-ம் தேதி இரு ரவுடி கும்பல்களுக்கு இடையே நடந்த மோதலில் வடக்குத்து கிராமத்தைச் சேர்ந்த நரேஷ்குமார் என்பவர் கொல்லப்பட்டார். ஆனந்த்ராஜ் என்பவர் படுகாயமடைந்தார்.

போலீஸ் விசாரணையில் நெய்வேலியைச் சேர்ந்த ஆனந்த்ராஜுக்கும், வடக்குத்து கிராமத்தைச் சேர்ந்த கோபிக்கும் இடையே கடந்த 8 ஆண்டுகளாக முன் விரோதம் இருந்ததும், அதனால் ஏற்பட்ட மோதலில் இந்த கொலை நடந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து நெய்வேலி டவுன்ஷிப் போலீஸார், கோபி உள்ளிட்ட 16 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இதில் தொடர்புடைய 14 பேரை கைது செய்தனர். இந்தக் கொலையில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கோபி நெய்வேலி அருகே புலவன்குப்பம் பகுதியிலுள்ள அரசுக்கு சொந்தமான முந்திரிக்காட்டில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து நேற்று அதிகாலை 3.30 மணியளவில் கோபியை போலீஸார் பிடிக்கச்சென்றபோது, போலீஸாரை அரிவாளால் வெட்டிவிட்டு கோபி தப்பிக்க முயன்றார். அப்போது தற்காப்புக்காக நெய்வேலி டவுன்ஷிப் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் துப்பாக்கியால் சுட்டதில் கோபியின் வலது காலில் குண்டு பாய்ந்ததால் போலீஸாரிடம் பிடிபட்டார்.

இதையடுத்து அவர் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த போலீஸார் பாண்டியராஜன், விஜயலாதசோழன் ஆகியோர் என்எல்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோபி மீது நெய்வேலி டவுன்ஷிப் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் 28-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

SCROLL FOR NEXT