சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நவீன்.
கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீஸார் நேற்று முன்தினம் வல்லம் படுகை பகுதியைச் சேர்ந்த நவீன் (25), கோவிந்தசாமி நகர் கௌதம் (25), வல்லத்துரை அருள் என்கிற ஜெயக்குமார் (30) ஆகியோரை உசுப்பூர் ரயில்வே கேட் பகுதியில், ஒரு கிலோ கஞ்சாவுடன் பிடித்தனர்.
அப்போது, நவீன் கத்தியைக் காட்டி மிரட்டி, அங்கிருந்து தப்பிஓடிவிட்டார். மற்ற இருவரும் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து, தலைமறைவாக இருந்த நவீன் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை காவல் ஆய்வாளர் அம்பேத்கர் தலைமையிலான போலீஸார் நவீனை அழைத்துக்கொண்டு, அவர் மறைத்து வைத்திருந்த கஞ்சா பொட்டலங்கள் மற்றும் ஆயுதங்களைப் பறிமுதல் செய்வதற்காக மாரியப்பா நகர் பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது, நவீன் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் காவலர் ஐயப்பனை வெட்டினார். இதையடுத்து ஆய்வாளர் அம்பேத்கர் துப்பாக்கியால் நவீனின் காலில் சுட்டுப் பிடித்தார். பின்னர், நவீனும், காயமடைந்த காவலர் ஐயப்பனும் சிதம்பரம் மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கடலூர் எஸ்.பி. ஜெயக்குமார், துப்பாக்கி சூடு நடைபெற்றபகுதியில் ஆய்வு மேற்கொண்டதுடன், மருத்துவமனையில்சிகிச்சை பெற்று வரும் காவலர் ஐயப்பனை சந்தித்து ஆறுதல் கூறினார்.