சென்னை: ஜவுளிக்கடை சென்றபோது, இளம் பெண் தவறவிட்ட தாலி செயினை போலீஸார் சிசிடிவி காட்சிகள் மூலம் கண்டெடுத்து கொடுத்தனர். திருநெல்வேலி மாவட்டம், செய்துங்கநல்லூர், மேற்கு பிள்ளையார் கோயில் தெருவில் வசித்து வருபவர் நஸ்ரின் (28).
இவர், உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சமீபத்தில் கணவருடன் சென்னை வந்தார். கடந்த 26-ம் தேதி மாலை உறவினர்களுடன் வண்ணாரப்பேட்டை,எம்.சி. சாலையில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் புது ஆடைகளை வாங்கிக்கொண்டு அங்கிருந்து வெளியே வந்தார்.
5.5 பவுன் தாலிச் செயின்: பின்னர் ஆட்டோவில் ஏறி பழைய வண்ணாரப்பேட்டை, பாண்டியன் தியேட்டர் அருகில் இறங்கியபோது, நஸ்ரின் கழுத்தில் இருந்த 5.5 பவுன் தாலிச் செயின் காணாமல் போனது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த அவர் இது தொடர்பாக மறுநாள் காலை வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்படி, அக்காவல் நிலைய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். முதல் கட்டமாக நஸ்ரின் சென்ற ஜவுளிக்கடைக்குச் சென்று விசாரணை செய்து, அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது கடைக்கு வெளியே சாலையில் கிடந்த தாலிச்செயினை ஒரு பெண் எடுத்துச் செல்வது தெரியவந்தது.
அதன் பேரில் போலீஸார் தீவிர விசாரணை செய்து சாலையில் கிடந்த தாலிச் செயினை கண்டெடுத்த புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த பெண்ணை அடையாளம் கண்டு அவரிடமிருந்து 5.5 பவுன் தாலிச் செயினை மீட்டு நஸ்ரினிடம் ஒப்படைத்தனர்.