சென்னை: அடையாறு பகுதியைச் சேர்ந்த 20 வயது இளம் பெண் ஒருவர் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் ஏ.ஐ (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பம் தொடர்பாக 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர், தனது வகுப்பு தோழருடன் நேற்று முன்தினம் இரவு காரில் பெசன்ட் நகர் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிக்கு சென்றார்.
அங்கு காரை நிறுத்திவிட்டு இருவரும் பின் இருக்கையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் காருக்குள் டார்ச் லைட் அடித்துள்ளார்.
பிறகு கார் கதவை திறந்து ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து கொண்டு, தான் சாஸ்திரி நகர் காவல் நிலைய காவலர் எனக்கூறி அடையாள அட்டையை காண்பித்துள்ளார். இங்கே தனிமையில் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என கல்லூரி மாணவியிடமும், அவரது வகுப்பு தோழரிடமும் அநாகரீகமாக பேசி உள்ளார்.
பின்னர், நான் கேட்கும் பணத்தை தரவில்லை என்றால் காவல் நிலையம் அழைத்துச் சென்று இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, இருவரும் தங்கள் கையில் பணம் இல்லை. ஏடிஎம்மில் எடுத்து தருகிறோம் எனக் கூறியுள்ளனர். இதையடுத்து அந்த காவலரே காரை ஓட்டிச் சென்று சிறிது தூரத்தில் உள்ள வங்கி ஏடிஎம் வாசலில் நிறுத்தியுள்ளார். கல்லூரி மாணவர் மட்டும் இறங்கி சென்று ஏடிஎம்-ல் ரூ.8,000 எடுத்து வந்து காவலரிடம் கொடுத்துள்ளார்.
கல்லூரி மாணவர் ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்ற நேரத்தில் காரில் அமர்ந்திருந்த மாணவியிடம் காவலர் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பணத்தை வாங்கியதும் மேலும், சிறு தூரம் காரை ஓட்டிச் சென்ற காவலர் காரை நிறுத்திவிட்டு, தனது இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டார்.
பிறகு கல்லூரி மாணவியும் அவரது வகுப்பு தோழரும் அவர்களது வீடுகளுக்கு சென்று விட்டனர். நடந்த சம்பவம் தொடர்பாக கல்லூரி மாணவி நேற்று முன்தினம் தனது சகோதரியிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து கல்லூரி மாணவியும் அவரது சகோதரியும் சாஸ்திரி நகர் காவல் நிலையம் வந்து புகார் அளித்தனர். அதன் பேரில் போலீஸார் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து ஜோசப் என்ற காவலரை கைது செய்தனர்.
கொண்டித்தோப்பு காவலர் குடியிருப்பில் வசிக்கும் அவர் அயல் பணியாக உயர் நீதிமன்ற வளாகத்தில் பணியாற்றுவதாக போலீஸார் தெரிவித்தனர். இவர் இதே போல் வேறு யாரிடமாவது கைவரிசை காட்டி உள்ளாரா? என அவரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.