ராஜராஜன், ராஜபாண்டியன்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே சொத்து தகராறில் அதிமுக முன்னாள் அமைச்சர் வெங்கடாசலத்தின் மகன் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வெங்கடாசலத்தின் மற்றொரு மகனை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டை சேர்ந்தவர் அ.வெங்கடாசலம். மறைந்த அதிமுக முன்னாள் அமைச்சரான இவரது குடும்பத்தினரிடையே சொத்துப் பிரச்சினை இருந்து வந்தது. இதில், வடகாட்டில் 3-வது மகன் ராஜராஜன் குடியிருந்த வீட்டை கடந்த ஆண்டு 2-வது மகனும், அதிமுக ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலாளருமான ராஜபாண்டியன் பூட்டி, குடும்பத்தினரை வெளியேற்றினார்.
காஸ் சிலிண்டரால் தாக்குதல்: இதுதொடர்பான வழக்கில், வீட்டின் சாவியை ராஜராஜன் குடும்பத்தினரிடம் ஒப்படைக்குமாறு உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், பூட்டியிருந்த வீட்டை திறந்து ராஜராஜன் குடும்பத்தினர் நேற்று சுத்தம் செய்தனர்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ராஜராஜனிடம் ராஜபாண்டியன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது ராஜபாண்டியனிடம் இருந்து தப்பி ஓடி, அருகிலிருந்த மற்றொரு வீட்டுக்குள் புகுந்த ராஜராஜனை, ராஜபாண்டியன் கத்தியால் குத்தியதுடன், காஸ் சிலிண்டரால் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ராஜராஜன் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து, ராஜபாண்டியனை கைது செய்யக் கோரி ராஜராஜனின் உறவினர்கள் புதுக்கோட்டை– பட்டுக்கோட்டை சாலையில், வீட்டின் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த வடகாடு போலீஸார் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். பின்னர், இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து, ராஜபாண்டி யனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.