வழிப்பறியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட இளைஞர்கள்.
சென்னை: ஆட்டோவில் சென்று வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கும்பல் கைது செய்யப்பட்டது. சென்னை ஏழுகிணறு சந்தை பகுதியில் வசிப்பவர் கார்த்திக் (38).
தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் மதியம் ஏழுகிணறு, மின்ட் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு ஆட்டோவில் வந்த 3 பேர், கார்த்திக்கை வழிமறித்து பணம் கேட்டனர்.
அவர் கொடுக்க மறுத்ததால் சரமாரியாக தாக்கி அவரிடமிருந்த பணம் மற்றும் செல்போனை பறித்துவிட்டு தப்பினர். அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து ஏழுகிணறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்படி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில் கார்த்திக்கை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டது எருக்கஞ்சேரியைச் சேர்ந்த மணிகண்டன் (28), விசாசர்பாடியைச் சேர்ந்த தனுஷ் (20), அதே பகுதியைச் சேர்ந்த பிரவீன்காந்த் என்ற முத்து (21) என்பது தெரிந்தது.
இதையடுத்து, தலைமறைவாக இருந்த அவர்களை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.