சீனிவாசன்

 
க்ரைம்

திருவள்ளூரில் மடிகணினி சார்ஜர் வயரில் கசிந்த மின்சாரம் தாக்கி பிளஸ் 1 மாணவர் உயிரிழப்பு

இரா.நாகராஜன்

திருவள்ளூர்: திருவள்ளூரில் மடிகணினி சார்ஜர் வயரில் கசிந்த மின்சாரம் தாக்கி பிளஸ் 1 மாணவன் உயிரிழந்த சம்பவம், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர், பெரியகுப்பம்- கற்குழாய் தெருவைச் சேர்ந்தவர் செந்தில். பெயிண்டரான இவரது மகன் சீனிவாசன்(17), திருவள்ளூர் அடுத்த மணவாளநகரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இந்நிலையில், பள்ளி விடுமுறை நாள் என்பதால் இன்று மதியம் சீனிவாசன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது, பக்கத்து வீட்டு சிறுவன், சீனிவாசன் வீட்டில் மடிகணினிக்கு சார்ஜ் போட்டதாக கூறப்படுகிறது. உறக்கத்தில் இருந்த சீனிவாசன், சார்ஜர் போட்டிருந்ததை கவனிக்காமல் தலையணை என நினைத்து, சார்ஜர் வயரை பிடித்த போது, அதில் கசிந்த மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார்.

இதையடுத்து, சீனிவாசன், சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்களின் பரிசோதனையில், மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே சீனிவாசன் உயிரிழந்தது தெரிய வந்தது. இதுகுறித்து, திருவள்ளூர் டவுன் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT