சென்னை: ரவுடி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். சென்னை வானகரம் தண்டலம் அண்ணாநகர் சாந்தி தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார் என்ற ராஜி (27).
ஆட்டோ ஓட்டுநரான இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. மேலும் வானகரம் காவல் நிலையத்தின் சரித்திரப் பதிவேடு குற்றவாளி பட்டியலிலும் உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த மே மாதம் வழக்கு ஒன்றில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், அவரது மனைவி ஆனந்தி (26) வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 2 பைக்குகளில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல், பெட்ரோல் நிரப்பப்பட்ட 2 பாட்டில்களுக்கு தீ வைத்து ராஜ்குமாரின் வீட்டின் வாசல் பகுதியை நோக்கி வீசிவிட்டு தப்பிச் சென்றது.
பொருட்கள் எரிந்தன
குண்டுகள் வெடித்து சிதறியதில் வீட்டின் முன்புறத்தில் இருந்த சில பொருட்கள் தீப்பிடித்து எரிந்தன. அதிர்ஷ்டவசமாக, வீட்டில் இருந்தவர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.
தகவல் அறிந்த வானகரம் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு நடத்தினர். ஆனந்தி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு தப்பிய மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.
போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், ராஜ்குமார் மற்றும் மற்றொரு தரப்பினர் அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததாகவும், அதுதொடர்பாக இரு தரப்புக்கும் நீண்ட நாட்களாக முன்விரோதம் இருந்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது.
அந்த முன்விரோதம் காரணமாகவே ராஜ்குமாரை அச்சுறுத்தும் நோக்கில் அவரது வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். மர்ம கும்பலை விரைவில் கைது செய்ய தனிப்படை போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.