சென்னை: பட்டியலினத்தவர் குறித்து அவதூறாகப் பேசி சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டதாக நடிகை மீரா மிதுனுக்கு எதிராக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் போலீஸார் கடந்த 2021-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர்.
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மீரா மிதுன் மனு தாக்கல் செய்தார்.
‘ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக எனது உடல்நலம் பாதிககப்பட்டு தினமும் ஏராளமான மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டு வருகிறேன். தற்போதைய சூழலில் வழக்கை எதிர்கொள்ள இயலாது. எனவே, என் மீதான வன்கொடுமை வழக்கை ரத்து செய்ய வேண்டும்’ என்று அதில் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, “இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றத்தில்தான் மனு தாக்கல் செய்ய முடியும்” என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.