சென்னை: சென்னை அடையாறு அருணாச்சலபுரம் மெயின் ரோட்டைச் சேர்ந்த ஆனந்த் ஜெய்ராம் மூர்த்தி என்பவருக்கு சொந்தமான நிலத்தை, துரைப்பாக்கத்தைச் சேர்ந்த அகிலா, அவரது கணவர் சண்முகசுந்தரம் (55) ஆகியோர் போலி ஆவணங்கள் தயாரித்து, அபகரிக்க முயன்றதாக 2008-ம் ஆண்டு காவல் ஆணையரகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அதன்பேரில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணை டிவில் இருவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, எழும்பூரில் உள்ள சிறப்பு பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் அகிலா தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகி வந்த நிலையில், சண்முக சுந்தரம் 2009-ம் ஆண்டு முதல் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார்.
இதையடுத்து அவரை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவுப்படி, அவரை தேடி வந்த நிலையில், கடந்த 17 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த சண்முகசுந்தரத்தை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.