க்ரைம்

வடலூர் அருகே இளம்பெண் சடலம் மீட்பு - காவல் துறை தீவிர விசாரணை

என்.முருகவேல்

கடலூர்: வடலூர் அருகே மண்ணில் அரைகுறையாக புதைக்கப்பட்ட இளம்பெண் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம், வடலூர் கண்ணுத்தோப்பு பாலத்தின் அருகில், விக்கிரவாண்டி - கும்பகோணம் புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பகுதியில் 30 வயது இளம்பெண் ஒருவர் அரைகுறையாக புதைக்கப்பட்டிருப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் வடலூர் காவல் நிலையத்துக்கு புகார் தெரிவித்துள்ளனர்.

அதன்பின் சம்பவ இடத்துக்கு வந்த வடலூர் போலீஸார் முகம் சிதைந்த நிலையில், காலில் அணிந்திருந்த கொலுசு தெரியும்படி புதைக்கப்பட்ட உடலைக் கண்டு, பெண்ணின் உடலை மீட்டனர்.

முகம், வாய் மற்றும் மூக்கு பகுதியில் காயம் இருந்தது. துப்பட்டாவால் அவரது கைகள் கட்டப்பட்டிருந்தன. பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அந்தப் பெண்ணை கம்மல் மற்றும் தாலி போன்றவைக்காக கொலை செய்தார்களா அல்லது பாலியல் வன்கொடுமைக்குப் பின் கொலை செய்து புதைத்தனரா என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

அந்த இளம்பெண் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்தும் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT