க்ரைம்

பழநி ரூ.100 கோடி நில விவகாரம்: 3 பேர் தலைமறைவு; தீவிர தேடுதல் வேட்டையில் சிபிசிஐடி போலீஸார்

ஆ.நல்லசிவன்

பழநி: பழநியில் ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் சட்டவிரோதமாக பத்திரப் பதிவு செய்யப்பட்டது தொடர்பாக நிலத்தை விற்றவர், வாங்கியவர்கள் என மூன்று பேரும் தலைமறைவான நிலையில் போலீஸார் தேடி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழநி மலை அடிவாரத்தில் தண்டபாணி சுவாமிகள் மடத்துக்குச் சொந்தமான 1.40 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலம் கடந்த ஜூலை 6-ம் தேதி சட்ட விரோதமாக இரு தனி நபர்களுக்கு பத்திரப் பதிவு செய்யப்பட்டது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

முறைகேடாக பதிவு செய்து கொடுத்ததாக பழநி சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், நிலத்தை விற்பனை செய்த அறக்கட்டளையை சேர்ந்த முருகதாஸ், நிலத்தை வாங்கிய உடுமலையை அடுத்த பாப்பாகுளத்தை சேர்ந்த வெள்ளைத்துரை மற்றும் பழநி அடுத்த டி.கே.என்.புதூரை சேர்ந்த சேதுபதி ஆகிய 4 பேர் மீதும் தேவஸ்தானம் சார்பில் பழநி அடிவாரம் போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது.

இதற்கிடையே, கோயில் நிலத்தை சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்த சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், அவருக்கு உதவிய மாவட்ட பதிவாளர் சசிகலா ஆகியோர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், முறைகேடாக நடைபெற்ற பத்திரப் பதிவை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வும் உத்தரவிட்டுள்ளது.

டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில், சிபிசிஐடி போலீஸார் பழநி கோயில் நிலம் விற்பனை செய்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். திண்டுக்கல் சிபிசிஐடி டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையில் நேற்று விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, மடத்துக்குச் சொந்தமான நிலத்தின் பத்திரப் பதிவு தொடர்பான முதல் தகவல் அறிக்கை (FIR) உள்ளிட்ட வழக்கு மற்றும் பத்திரப் பதிவு ஆவணங்களை சிபிசிஐடி போலீஸாரிடம் பழநி அடிவாரம் போலீஸார் ஒப்படைத்தனர்.

சிபிசிஐடி போலீஸார் நேற்று (ஜூலை 16) மாலையே விசாரணையைத் தொடங்கினர். பழநியில் உள்ள தண்டபாணி சுவாமிகள் மடத்துக்குச் சொந்தமான 1.40 ஏக்கர் நிலத்தைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து பழநி தேவஸ்தான அலுவலகம், பழநி பத்திரப் பதிவு அலுவலகத்திலும் விசாரணை நடத்தினர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT