சென்னை: பாடி, டிஎம்பி நகர், அண்ணா தெருவில் வசித்து வருபவர் கணேஷ் (34). மேற்கு முகப்பேர், பள்ளி தெருவில் அடகுக் கடை நடத்தி வருகிறார்.
இந்த கடையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா நேரடி காட்சியை அவர் தனது செல்போனில் பார்க்கும் வசதியை வைத்துள்ளார். கடந்த 19-ம் தேதி இரவு கணேஷ் தனது கடையை வழக்கம்போல் பூட்டிவிட்டு வீடு திரும்பினார்.
நள்ளிரவு சுமார் 11 மணியளவில், அவர் தனது செல்போன் மூலம் சிசிடிவி கேமரா காட்சியை பார்த்தபோது, ஒரு நபர் அடகுக் கடையின் பூட்டை பெரிய இரும்புக் கம்பியால் உடைத்துக் கொண்டிருந்தார். இது தொடர்பாக அவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.
தகவல் அறிந்து நொளம்பூர் காவல் நிலைய ரோந்து போலீஸார் சம்பவ இடம் விரைந்தனர். போலீஸாரை கண்டதும் அந்த நபர் தப்பியோட முயன்றார். அவரை போலீஸார் விரட்டிப் பிடித்து விசாரித்தனர். இதில் பிடிபட்டது பிஹார் மாநிலம், சமஸ்திபூரைச் சேர்ந்த கோவிந்த்குமார் சர்மா (28) என்பது தெரிந்தது.
இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். துரிதமாக செயல்பட்டு தகவலை போலீஸாருக்கு தெரிவித்ததால் பெரிய அளவில் நடைபெற இருந்த திருட்டு சம்பவம் தடுக்கப்பட்டது. அந்த அடகுக் கடை உரிமையாளரை போலீஸார் வெகுவாகப் பாராட்டினர்.