உயிரிழந்த மாணவர் அமுதன்
கோவை: கோவையில் கல்லூரி மாணவர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒரு மாணவரை போலீஸார் இன்று கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் வடக்குவேந்தல் பகுதியில் உள்ள வள்ளலார் தெருவைச் சேர்ந்த கென்னடி - சுமதி தம்பதியர். இவர்களின் மகன் அமுதன்(19). இவர், கோவை மாவட்டம் செட்டிபாளையம் காவல் எல்லைக்குட்பட்ட மலுமிச்சம்பட்டியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த 10-ம் தேதி அமுதன் மற்றும் அவரது நண்பர் ஸ்ரீமன் ஆகியோர் கல்லூரி அருகே வந்தபோது, கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் வந்த கும்பல் ஒன்று அமுதன், ஸ்ரீமனை தனியிடத்துக்கு அழைத்துச் சென்று தாக்கியுள்ளது. இதில், படுகாயமடைந்த அமுதன் அன்றைய தினம் மதியம் விடுதியில் இருந்த போது உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக தகவலறிந்த செட்டிபாளையம் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சக மாணவர்கள் தாக்கியதில், அமுதன் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மூச்சுத்திணறி உயிரிழந்தது தெரியவந்தது.
இச்சம்பவம் தொடர்பாக செட்டிபாளையம் போலீஸாா் கொலை வழக்குப் பதிவு செய்து கடலூரை சேர்ந்த ஆராமுதன் (20), மானாமதுரையை சேர்ந்த அரவிந்த் (21), நீடாமங்கலத்தை சேர்ந்த சிவரோகித் (20), குன்னம் பகுதியை சேர்ந்த மணிபாலு (20), திருவள்ளூரைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோரை போலீஸார் நேற்று (ஆக.12) கைது செய்தனர்.
இவ்வழக்கில் மேலும் சில மாணவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்ததையடுத்து, அவர்களையும் போலீஸாா் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக மதுரையைச் சேர்ந்த மாணவர் சந்தோஷ் (20) என்பவரை போலீஸார் இன்று (ஆக.13) கைது செய்தனர். கல்லூரி விடுதியில் சீனியர் மாணவர்கள் கஞ்சா விற்பது குறித்து தகவல் தெரிவித்ததால் மாணவர்கள் கும்பலாகச் சேர்ந்து அமுதனை தாக்கிக் கொன்றதாக அவரது பெற்றோர் தரப்பில் கூறப்படுகிறது.
போலீஸார் தரப்பில் கூறுகையில், “கல்லூரியில் மாணவர்களிடையே அடிக்கடி கோஷ்டி மோதல் ஏற்பட்டு வந்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த 10-ம் தேதி அமுதன் உள்ளிட்ட 6 பேர் ஒத்தக்கால் மண்டபத்தில் தங்கியிருந்த மாணவர் தீபக்கின் அறைக்குச் சென்று, அங்குள்ளவர்களை தாக்கி செல்போனை பறித்துள்ளனர். அன்றைய தினமே எதிர்தரப்பினர் தாக்கியதில் மாணவர் அமுதன் உயிரிழந்தார்” என போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்லூரி விடுதியில் தங்கி வகுப்புக்குச் சென்றுவந்த அமுதன், கடந்த ஜூலை 11-ம் தேதி விடுதி சமையலரை தாக்கியதால், சஸ்பெண்ட் செய்யப்பட்டு, ஒத்தக்கால் மண்டபத்தில் தங்கியிருந்த போது, இச்சம்பவம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.