ஈரோடு: சத்தியமங்கலம் அருகே அரசுப் பள்ளியில் மனைவியின் சமையலர் பணி பறிபோன ஆத்திரத்தில் ஆசிரியர்களுக்கான மாதிரி உணவில் விஷப்பவுடர் கலக்கச் சொன்னவர் கைது செய்யப்பட்டார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே ராம பையலூர் பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் தமிழக அரசின் காலை உணவுத் திட்டமும் செயல்பாட்டில் உள்ளது.
கடந்த 31-ம் தேதி காலை உணவு சாம்பாரில் வழக்கத்தைவிட மஞ்சள் தூள் அதிகமாக இருப்பதாகத் தெரிந்தது. இதுகுறித்து சமையலர்களிடம் கேட்டபோது, அளவாகவே மஞ்சள் தூள் சேர்த்ததாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர், மாணவி ஒருவரை மிரட்டி, ஆசிரியர் மாதிரி பரிசோதனைக்காக வைத்திருந்த சாம்பாரில் விஷப்பவுடரைக் கலக்குமாறு கூறியது தெரியவந்தது.
இதுகுறித்து சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் தலைமை ஆசிரியை புகார் அளித்தார். போலீஸார் விசாரணை நடத்தி, ஆறுமுகத்தை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். இதில், ஆறுமுகத்தின் மனைவி அந்தப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தின் சமையலராக பணியாற்றி வந்ததும், அவர் சரியாக சமையல் செய்யாததால் பணியில் இருந்து நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக வேறு ஒருவர் நியமிக்கப்பட்டதும் தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த ஆறுமுகம், மாணவி ஒருவரை மிரட்டி, சாம்பாரில் விஷப்பவுடரைக் கலக்குமாறு கூறியதாக போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ஆறுமுகத்தை போலீஸார் கைது செய்தனர். அதிர்ஷ்டவசமாக, குழந்தைகள் சாப்பிடுவதற்கான சாம்பாரில் விஷப் பவுடர் கலக்கப்படாததால் பெரும் விபரீதம் தவிர்க்கப்பட்டது.