க்ரைம்

சென்னையில் பல்வேறு திருட்டு வழக்குகளில் சிக்கிய பிரபல ‘ஷட்டர்’ கொள்ளையன் கைது

இ.ராமகிருஷ்ணன்

சென்னை: பல்வேறு திருட்டு வழக்குகளில் தேடப்பட்ட பிரபல ஷட்டர் கொள்ளையனை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை சூளைமேடு பத்மநாப நகர் வள்ளலார் தெருவைச் சேர்ந்தவர் பால் தங்கச்சன் (61). இவர் தேனாம்பேட்டை யாயா அலி 2-வது தெருவில் டிஜிட்டல் பிரிண்டர் கடை நடத்தி வருகிறார்.

கடந்த 25-ம் தேதி இரவு கடையின் கல்லாவில் ரூ.26 ஆயிரத்தை வைத்துவிட்டு கடையை பூட்டிச் சென்றார். 27-ம் தேதி காலை கடையை திறக்க வந்தபோது, ஷட்டரின் பூட்டு உடைக்கப்பட்டு, கல்லாவில் இருந்த ரூ.26 ஆயிரம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து பால் தங்கச்சன் அளித்த புகாரின்பேரில், தேனாம்பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல் கட்டமாக போலீஸார் சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

இதன் அடிப்படையில், திருட்டில் ஈடுபட்டதாக தேனாம்பேட்டை முத்தையா தெருவைச் சேர்ந்த விக்னேஷ் (19) என்ற நபரை கைது செய்தனர். அந்த நபர் திருடிய பணத்தில் செல்போன் வாங்கியிருந்தது விசாரணையில் தெரியவந்தது. அந்த செல்போனை போலீஸார் மீட்டனர்.

மேலும், விக்னேஷ் மீது தேனாம்பேட்டை, ஜாம்பஜார், துரைப்பாக்கம், குமரன் நகர் ஆகிய காவல் நிலையங்களில் ஏற்கெனவே 5 திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்பேரில் சிறையில் அடைக்கப்பட்டார்.

SCROLL FOR NEXT