சென்னை: திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த 2 பேரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள திருபுவனத்தைச் சேர்ந்தவர் பாமக முன்னாள் நகரச் செயலாளர் ராமலிங்கம். அப்பகுதியில் மத மாற்றத்தில் ஈடுபட்ட சிலரைக் கண்டித்ததால் 2019 பிப்ரவரி மாதம் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக திருவிடைமருதூர் போலீஸார் விசாரணை நடத்தி, குறிச்சிமலை பகுதியைச் சேர்ந்த முகமது ரியாஸ், திருபுவனம் நிஸாம் அலி, சர்புதீன், முகமது ரிஸ்வான், திருவிடைமருதூர் அசாருதீன், திருமங்கலக்குடி முகமது தவ்பீக், முகமது பர்வீஸ், அவணியாபுரம் தவ்ஹித் பாட்சா, காரைக்கால் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த முகமது ஹசன் குத்தூஸ் உள்ளிட்டோரை அடுத்தடுத்து கைது செய்தனர்.
மேலும், தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர், இந்த வழக்கு என்ஐஏ வசம் ஒப்படைக்கப்பட்டது. என்ஐஏ அதிகாரிகள் ராமலிங்கம் கொலை தொடர்பாக புதிதாக வழக்கு பதிவு செய்து, அடுத்தடுத்து கைது நடவடிக்கை மேற்கொண்டனர்.
தொடர்ந்து, இந்த வழக்கில் 18 பேர் மீது என்ஐஏ அதிகாரிகள், சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். மேலும், தலைமறைவாக இருக்கும் நபர்களைக் கைது செய்ய தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இந்நிலையில், இந்தக் கொலை வழக்கில் தொடர்புடைய முகமது அலி ஜின்னா மற்றும் அவருக்கு அடைக்கலம் கொடுத்த அஸ்மத் ஆகியோரை என்ஐஏ அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். பின்னர், கைது செய்யப்பட்ட இருவரையும் பூந்தமல்லியில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி மலர்விழி முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
முகமது அலி ஜின்னாவை ஜன. 18-ம் தேதி வரையும், அஸ்மத்தை ஜன. 19-ம் தேதி வரையும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்கத் திட்ட மிட்டிருப்பதாகவும், ராமலிங்கம் கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து விட்டதாகவும் என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்தனர்.