மதுரை: மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையத்துக்கு ஏலக்காய் லாரி தீப்பற்றிய வழக்கு விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட தேனியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் மர்மமான முறையில் உயிரிழந்தார். காவல் நிலையத்திற்குள் போலீஸாரே அவரை அடித்துக் கொலை செய்துவிட்டதாக உறவினர்கள் புகார் தெரிவித்தனர். இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, காவல் ஆய்வாளர் உள்பட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டம் டி.அழகர்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த ரங்கப்பன் மகன் பாலகிருஷ்ணன் (42). தனியார் நிறுவனத்தில் லாரி ஓட்டுநராக இருந்தார். நவ. 3-ம் தேதி அதிகாலை தேவாரத்திலிருந்து மதுரைக்கு பார்சல்கள் மற்றும் ஏலக்காய் மூட்டைகளை ஏற்றிச் சென்றார்.
உசிலம்பட்டி அருகே வாலாந்தூர் கண்மாய்க்கரை அருகே வாகனம் திடீரென தீப்பிடித்தது. இதில், வாகனத்தில் இருந்த சரக்குகள் எரிந்து சேதமடைந்தன. இது தொடர்பாக பாலகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் வாலாந்தூர் காவல் நிலையத்தில் தற்செயலாக நடந்த தீ விபத்து என வழக்குப் பதியப்பட்டது.
இந்நிலையில் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) முத்து நேற்று முன்தினம் மாலை செக்கானூரணி காவல் நிலையத்துக்கு பாலகிருஷ்ணனை அழைத்து வந்து விசாரித்துள்ளார். நேற்று காலை 6 மணியளவில் காவல் ஆய்வாளரின் அறை அருகே உள்ள கழிப்பறையில் பாலகிருஷ்ணன் மர்மமான முறையில் மயங்கி கிடந்தார்.
ஆனால், அவர் முழுக்கை சட்டையை ஜன்னலில் கட்டி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொள்ள முயன்றபோது மயக்க நிலையில் இருந்ததாக போலீஸார் தெரிவித்தனர். மேலும், உடனடியாக அவரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும், அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வரும் வழியில் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்ததாகவும் போலீஸார் கூறினர்.
இந்நிலையில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற போலீஸார், பாலகிருஷ்ணனை அடித்துக் கொலை செய்துவிட்டதாக புகார் கூறி, அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் காவல் நிலையத்தை நேற்று முற்றுகையிட்டனர்.
தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் ஆகியோர் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தினர். சம்பவத்தின்போது பணியில் இருந்த காவல் ஆய்வாளர் முத்து, தலைமைக் காவலர்கள் பழனிவேல்ராஜன், கலைச்செல்வி ஆகியோர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இச்சம்பவம் குறித்து நீதித்துறை நடுவர் விசாரணை நடத்தினார். மேலும், இவ்வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. பாலகிருஷ்ணனின் உடல் மதுரை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
அவர் போலீஸார் தாக்கியதில் உயிரிழந்தாரா அல்லது விசாரணைக்கு பயந்து, போலீஸார் கூறுவதுபோல் தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இறப்பில் மர்மம் உள்ளது: பாலகிருஷ்ணனின் மனைவி சுதா செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘நவ. 12-ல் செக்கானூரணி போலீஸார் எனது கணவருடன் 9 பேரை அழைத்து விசாரித்தனர். பின்னர், அவர்களை அனுப்பிவிட்டு, எனது கணவரை மட்டும் இரவில் காவல் நிலையத்தில் தங்க வைத்தனர்.
அப்போது, என்னிடம் செல்போனில் பேசிய கணவர், ‘தீ விபத்து வழக்கை என் மீது பதிய போலீஸார் திட்டமிடுகின்றனர். என்னை ஒத்துக்கொள்ளுமாறு போலீஸார் அழுத்தம் கொடுக்கின்றனர். விசாரணை முடிந்ததும் காலையில் வீட்டுக்கு வருகிறேன்’ என்றார்.
ஆனால் நேற்று (நவ. 14) காலை போலீஸார் என்னிடம் செல்போனில் தொடர்புகொண்டு, கணவர் தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிவித்தனர். எனது கணவர் தற்கொலை செய்யும் அளவுக்கு கோழை இல்லை. அவரது இறப்பு மர்மமாக உள்ளது. உரிய நீதி கிடைக்க வேண்டும்’ என்று கூறினார்.