கோவையில் மர்மமான முறையில் உயிரிழந்த மாணவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக விக்கிரவாண்டி புறவழிச் சாலையில் மறியலில் ஈடுபட்ட உறவினர்கள். (உள்படம்) மாணவி தர்ணிகா

 
க்ரைம்

கோவை வேளாண் கல்லூரியில் மாணவி மர்ம மரணம் - விக்கிரவாண்டியில் உறவினர்கள் சாலை மறியல்

செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி: கோவை வேளாண் பல்கலைக் கழக விடுதியில் தங்கி பயின்று வந்த விக்கிரவாண்டியைச் சேர்ந்த மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார்.

மாணவியின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் நேற்று விக்கி ரவாண்டியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியை அடுத்த ஆர்.சி.மேலக்கொந்தையை சேர்ந்தமகாலிங்கம் - வாசுகி தம்பதியிரின் மகள் தர்ணிகா (19).

இவர் கோவை வேளாண் பல்கலைக்கழக விடுதியில் தங்கி இரண்டாம் ஆண்டு பிஎஸ்சி வேளாண்மை படித்து வந்தார். கடந்த 9-ம் தேதி இரவு விடுதி யில் உள்ள கழிப்பறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக கோவை ஆர்.எஸ்.புரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து மாணவி தர்ணிகாவின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்து பெற்றோரிடம் நேற்று முன்தினம் ஒப்படைத்தனர்.

நேற்று முன் தினம் மாலை அவரது சடலம் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில் நேற்று பிற்பகல் மாணவியின் உறவினர்கள் ஒன்று திரண்டு விக்கிரவாண்டி - மேலக்கொந்தை கூட்டு ரோடு எதிரே உள்ள புறவழிச் சாலையின் இரு புறமும் அமர்ந்து மாணவி இறந்தது குறித்து பெற்றோரிடம் கூறாமல் பிரேத பரிசோதனை செய்ததாகவும், இறப்பு பற்றி தகவல் கூறாத விடுதி வார்டன் மற்றும் கல்லூரி நிர்வாகத்தின் மீதும் நீதி விசாரணை நடத்த வேண்டும் எனவும், நிவாரணம் வழங்க கோரியும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த விக்கிரவாண்டி போலீஸார் மற்றும் வட்டாட்சியர் வேல்முருகன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சம்பவம் நடந்தது கோவை மாவட்டம் என்பதால் அந்த மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல ளித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

ஏற்கெனவே சந்தேக மரணம் பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு மாணவியின் உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

SCROLL FOR NEXT