சென்னை: ‘இன்ஸ்டாகிராம்’ பெண் பிரபலம் பாலியல் புகார் அளித்துள்ள நிலையில், ‘பிக்பாஸ்’ முத்துக்குமரன் தலைமறைவாகி உள்ளார். அவரை, 2 தனிப்படைகள் அமைத்து போலீஸார் தேடிவருகின்றனர்.
‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான முத்துக்குமரனுக்கும், இளம் இன்ஸ்டாகிராம் பெண் பிரபலத்துக்கும் இடையே சமூக வலைதளம் வாயிலாக பழக்கம் ஏற்பட்டது.
அப்போது முத்துக்குமரன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து, நெருக்கமாக பழகி, கணவன், மனைவி உறவில் இருந்து விட்டு, திருமணம் செய்யாமல் ஏமாற்றிவிட்டதாக அந்தப் பெண் குற்றம்சாட்டினார்.
இதற்கிடையே தன்னைப் பற்றி அவதூறு பரப்புவதாகக் கூறி, முத்துக்குமரனும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில், திருமண வாக்குறுதி அளித்து பாலியல் உறவு கொண்டு ஏமாற்றியதாகவும், தன்னை மிரட்டியதாகவும் கூறி, அந்த இளம்பெண் சமீபத்தில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இதுதொடர்பாக ஆடியோ பதிவுகள் உள்ளிட்ட ஆதாரங்களையும் சமர்ப்பித்திருந்தார். இந்த புகார் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீஸாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சட்ட நிபுணர்களின் ஆலோசனைக்குப் பிறகு, முத்துக்குமரன் மீது, திருமணம் செய்து கொள்வதாக பொய் வாக்குறுதி அளித்து, அதை நிறைவேற்றும் எண்ணம் தொடக்கத்திலேயே இல்லாமல் பெண்ணுடன் பாலியல் உறவு கொள்வதை தண்டிக்கும் சட்டப்பிரிவான ‘69’ (பிஎன்எஸ்) கீழ் வழக்குப் பதிந்தனர்.
இந்நிலையில், முத்துக்குமரன் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக வீட்டில் இல்லாமல் தலைமறைவான தாகக் கூறப்படுகிறது.
அவரை கைது செய்வதற்காக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவரது செல்போன் தொடர்புகள் மற்றும் இருப்பிட விவரங்களை கண்டறிந்து பிடிக்கும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.