மகேஸ்வரி | தீபிகா

 
க்ரைம்

வங்கியில் அடமானம் வைத்த வீடுகளை 5 பேருக்கு குத்தகைக்கு விட்டு ரூ.31.50 லட்சம் மோசடி

செய்திப்பிரிவு

சென்னை: வங்கியில் ஏற்கெனவே அடமானம் வைக்கப்பட்ட வீடுகளை 5 பேருக்கு குத்தகைக்கு விட்டு ரூ.31.50 லட்சம் மோசடி செய்த வழக்கில் தாய்- மகளை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை கொருக்குப்பேட்டை மூப்பனார் நகர் காந்தி தெருவில் உள்ள வீட்டை ராஜேஷ் (31) என்பவர் கடந்த ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி முதல் ரூ.4 லட்சம் குத்தகைக்கு எடுத்து குடியிருந்து வந்தார். இந்நிலையில், கடந்த ஜூன் 15-ம் தேதி தனியார் வங்கி அதிகாரிகள் வீட்டுக்கு வந்து, அதன் உரிமையாளர் வெங்கடேசன் வங்கியில் ரூ.59 லட்சம் கடன் பெற்று, தொகையை திருப்பிச் செலுத்தாததால் வீட்டை ஜப்தி செய்வதாக கூறி வீட்டுக்கு 'சீல்' வைத்தனர்.

வெங்கடேசன் மற்றும் அவரது குடும்பத்தினர், அந்த கட்டிடத்தின் மற்ற 4 வீடுகளில் குடியிருந்தவர்களிடமும் குத்தகை பணம் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து ராஜேஷ் அளித்த புகாரின்பேரில், ஆர்.கே.நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

விசாரணையில், வெங்கடேசன், அவரது மனைவி தீபிகா (31) மற்றும் தீபிகாவின் தாயார் மகேஸ்வரி (53) ஆகியோர், வீடு ஜப்தி செய்யப்படுவது தெரிந்திருந்தும் 5 பேருக்கு குத்தகைக்கு விட்டு ரூ.31.50 லட்சம் பெற்றது தெரிய வந்தது.

இதையடுத்து கோயம்புத்தூரில் பதுங்கியிருந்த தீபிகா, அவரது தாயார் மகேஸ்வரி (53) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் மீட்கப்பட்டது. இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்டு தலைமறைவாக உள்ள வீட்டு உரிமையாளர் வெங்கடேசனை போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT