க்ரைம்

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நிறுவனத்துக்கு ஆர்டர் செய்த சொகுசு காரை வாங்கி தராமல் ரூ.2.60 கோடி மோசடி

இடைத்தரகர் மும்பையில் கைது

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தின் இயக்குநர் ராம்குமார்(45). இவர் 2024-ம் ஆண்டு அலுவலகப் பயன்பாட்டுக்காக சொகுசு காரை வாங்க முடிவு செய்து, கர்நாடகாவை சேர்ந்த அனுப் சுமித் பெர்னாண்டஸ் என்பவரை அணுகியுள்ளார்.

அப்போது, ஐதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனம் மூலம் வெளிநாட்டில் இருந்து காரை வாங்கித் தருவதாகவும், அதற்கான முழுத் தொகையையும் செலுத்திய 40 நாட்களுக்குள் காரை வாங்கித் தருவதாகவும் அனுப் சுமித் பெர்னாண்டஸ் உறுதி அளித்துள்ளார்.

அதையடுத்து, 2 தவணைகளாக மொத்தம் ரூ.2.60 கோடியை சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தின் வங்கிக் கணக்குக்கு ராம்குமார் பரிமாற்றம் செய்துள்ளார். ஆனால், உறுதியளித்தபடி அனுப் சுமித் பெர்னாண்டஸ் காரை வாங்கித் தரவில்லை. பணத்தையும் திருப்பி வழங்காமல் காலம்தாழ்த்தி வந்துள்ளார்.

இதையடுத்து ராம்குமார், தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீஸார், அனுப் சுமித் பெர்னாண்டஸ் வெளிநாட்டில் இருப்பது தெரியவந்ததால், லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தனர்.

இந்நிலையில், கடந்த 5-ம் தேதி கத்தாரில் இருந்து விமானம் மூலம் மும்பை விமான நிலையத்துக்கு அனுப் சுமித் பெர்னாண்டஸ் வந்தார். அப்போது அவரை விமான நிலைய அதிகாரிகள் பிடித்து, அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும், தேனாம்பேட்டை காவல் நிலைய தனிப்படை போலீஸார் மும்பைக்கு விரைந்து சென்று அனுப் சுமித் பெர்னாண்டஸைக் கைது செய்தனர்.

பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சென்னைக்கு அழைத்து வந்து புழல் சிறையில் அடைத்தனர். ஆழ்வார்பேட்டை தனியார் நிறுவனம், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுடையது என போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

SCROLL FOR NEXT