சமூக வலைதளத்தில் பதிவான பைக் ரேஸ் படம் | உள்படம்: உயிரிழந்த ஸ்ரீகுகன்
சென்னை: சென்னையில் நேற்று முன்தினம் நள்ளிரவு அண்ணாசாலை, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் உள்பட நகரின் முக்கிய பகுதிகளில் சுமார் 100 இளைஞர்கள் சாரை சாரையாக நகரின் பல்வேறு பகுதிகளில் பைக் ரேஸில் ஈடுபட்டனர்.
சென்னை ஆர்.ஏ.புரம் கிரீன்வேஸ் சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணபுரத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீகுகன் (21). பட்டதாரி இளைஞரான இவர் சகோதரரின் பைக் பழுதுபார்க்கும் கடையில் வேலை செய்து வந்தார்.
இவர் நேற்று அதிகாலை 2.15 மணியளவில் நண்பரின் பைக்கில் கோட்டூரபுரம் சர்தார் படேல் சாலை, காந்தி மண்டபம் மேம்பாலத்தில் கிழக்கு பக்கம் இறக்கத்தில் சென்னை ஐஐடி அவுட்கேட் எதிர்புறமாக சென்றபோது, மேம்பாலத்தின் தடுப்பு கம்பியில் மோதினார்.
மோதிய வேகத்தில் மேம்பாலத்திலிருந்து கீழே விழுந்த ஸ்ரீகுகன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவர் பைக் ரேஸில் ஈடுபட்டபோது விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து விசாரணை நடக்கிறது.
7 பேர் கைது
சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீஸார் பைக் ரேஸில் ஈடுபட்ட 7 இளைஞர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.