சஞ்சய் வர்மா
சென்னை: பிராட்வே பகுதியில் தனியார் செல்போன் நிறுவன மேலாளராக உள்ள வெற்றிவேல் (34) கடந்த சில நாட்களாக அந்த நிறுவனத்தின் பல்வேறு கிளைகளில் ஒரே நபர் போலி ஆவணங்களை சமர்ப்பித்து சிம் கார்டுகளை வாங்கி மோசடியில் ஈடுபட்டு வருவதை அவர் கண்டறிந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் பூக்கடை பகுதியில் உள்ள அந்த நிறுவன கிளைக்கு வந்த ஒருவர், தனது ஓட்டுநர் உரிமத்தை வழங்கி 2 சிம் கார்டுகளை வாங்க முயன்றார்.
மேலாளர் வெற்றிவேல், ஓட்டுநர் உரிமத்தை ஆய்வு செய்தபோது அது போலியாக தயாரிக்கப்பட்டது என்பது தெரியவந்தது. மேலும் இதே நபர் ஏற்கெனவே பலமுறை போலி ஆவணங்களை பயன்படுத்தி சிம் கார்டுகள் வாங்கி மோசடி செய்திருப்பதும் உறுதியானது.
இதையடுத்து அவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து எஸ்பிளனேடு போலீஸார் விரைந்து சென்று அந்த நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.
இதில் பிடிபட்டவர் கர்நாடக மாநிலம் பெங்களூரு ராஜாஜி நகரைச் சேர்ந்த சஞ்சய் வர்மா (53) என்பது தெரியவந்தது. அவர் சமர்ப்பித்த ஓட்டுநர் உரிமம் போலியாக தயாரிக்கப்பட்டதும், இதேபோல் திருச்சி, மதுரை, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் போலி ஆவணங்களை பயன்படுத்தி சிம் கார்டு கள் பெற்று மோசடியில் ஈடுபட்டதும் அம்பலமானது.
இதையடுத்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து சஞ்சய் வர்மாவை கைது செய்தனர். அவரிடமிருந்து 2 சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் விசாரணையில், சஞ்சய் வர்மா மீது கேரள மாநிலத்தில் தம்பானூர், தலச்சேரி உள்ளிட்ட காவல் நிலையங்களில் கள்ள நோட்டு தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.
அதேபோல், சென்னை புனித தோமையர் மலை காவல் நிலைய திருட்டு வழக்கு உள்ளது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட சஞ்சய் வர்மா நேற்று சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், அவர் பயன்படுத்திய போலி ஆவணங்கள் மற்றும் சிம் கார்டுகள் மூலம் நடைபெற்ற மோசடிகள் குறித்தும் விசாரணை நடைபெறுகிறது.