சென்னை: கூலி பாக்கி தகராறில் கொத்தனார் கொலை செய்யப்பட்டார்.
கட்டிடத்திலிருந்து தவறி விழுந்ததாக நாடகமாடிய மேஸ்திரியை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை வண்ணாரப்பேட்டை நல்லப்ப வாத்தியார் தெருவில் வெங்கடாசலம் என்பவருக்கு சொந்தமான இடத்தில் புதிய வீடு கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த பணியில் பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த கோட்டீஸ்வரன் (46) என்பவர் மேஸ்திரியாக பணியாற்றி வந்தார்.
கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகரை சேர்ந்த ஜெயக்கொடி (55) என்பவர் கொத்தனாராக வேலை செய்து வந்தார்.
வாக்குவாதம்
ஜெயக்கொடிக்கு கோட்டீஸ்வரன் ரூ.10 ஆயிரம் கூலி பாக்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அதை கேட்பதற்காக ஜெயக்கொடி நேற்று கட்டிட வேலை நடைபெறும் இடத்துக்கு சென்றார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
ஆத்திரமடைந்த கோட்டீஸ்வரன், அங்கிருந்த ரீப்பர் கட்டையால் ஜெயக்கொடியை தாக்கியுள்ளார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த ஜெயக்கொடி மயங்கி விழுந்தார்.
உடனடியாக அவருடன் வேலை பார்த்த தட்சிணாமூர்த்தி என்பவர் ஜெயக்கொடியை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் ஜெயக்கொடி ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
போலீஸ் விசாரணை
இதுகுறித்து மருத்துவமனையில் இருந்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. முதலில் கட்டிட வேலையின்போது மேலே இருந்து தவறி விழுந்து ஜெயக்கொடி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து வண்ணாரப்பேட்டை போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், ஜெயக்கொடி கூலி பாக்கியை கேட்கச் சென்றபோது ஏற்பட்ட தகராறில் கோட்டீஸ்வரன் ரீப்பர் கட்டையால் தாக்கியதும், இதில் ஜெயக்கொடி மயங்கி விழுந்து உயிரிழந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கோட்டீஸ்வரனை போலீஸார் கைது செய்தனர்.