ஆதிமூலம்

 
க்ரைம்

சென்னை | ரூ.6 கோடி நில அபகரிப்பு வழக்கில் 11 ஆண்டாக தலைமறைவாக இருந்தவர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: நில அபகரிப்பு வழக்கில் மோசடிக்கு மூளையாக செயல்பட்டு, 11 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் கைது செய்தனர். சென்னை வன்னிய தேனாம்பேட்டை, நாட்டு முத்து தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (57).

இவருக்கு எழும்பூர் சாமி ரெட்டி தெருவில் ரூ.6 கோடி மதிப்பில் பூர்வீகச் சொத்து இருந்தது. இதை சிலர் போலி ஆவணங்கள் மற்றும் ஆள்மாறாட்டம் மூலம் அபகரித்துவிட்டனர். இந்த சொத்தை மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் ஆணையரிடம் 2014-ல் புகார் அளித்தார்.

இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவின் கீழ் வரும் நில மோசடி புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.

இந்த மோசடி தொடர்பாக வன்னிய தேனாம்பேட்டையை சேர்ந்த ஜெகநாதன், சென்னை ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த சுகுமார் ஆகியோர் 2016-ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர்.

இவ்வழக்கில் மூளையாகச் செயல்பட்ட திருவண்ணாமலை மாவட்டம், தண்டாரம்பட்டு பகுதியைச் சேர்ந்த ஆதிமூலம் (51) தலைமறைவாக இருந்தார்.

அவரை தனிப்படை போலீஸார் தேடிவந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டம், நாலாள்பள்ளம் பகுதியில் ஆதிமூலத்தை நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர் அவரை சென்னை அழைத்து வந்து சிறையில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT