முகமது இர்பான்
ஆவடி: பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த முகமது இர்பான், சென்னை கொரட்டூர் பகுதியில் 2017-ம் ஆண்டில் கட்டிட வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது முகமது இர்பானுக்கும் அவருடன் பணியில் ஈடுபட்டு வந்த லட்சுமிக்கும் தவறான நட்பு ஏற்பட்டது.
அதன் விளைவாக, லட்சுமியின் கணவர் சாமிதாஸை முகமது இர்பானும், லட்சுமியும் சேர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு கொலை செய்ததாக கூறப்படுகிறது.
இந்த வழக்குத் தொடர்பாக முகமது இர்பான் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார். பிறகு 2018-ம் ஆண்டு பிணையில் வெளியே வந்த முகமது இர்பான், பூந்தமல்லியில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் 2-ல் நடைபெற்று வந்த வழக்கு விசாரணையில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால் நீதிமன்ற பிடியாணையின் பேரில் கடந்த 2023-ம் ஆண்டு டெல்லியில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
பிறகு நீதிமன்ற பிணையில் சிறையிலிருந்து வெளியே வந்த முகமது இர்பான், நீதிமன்றத்தில் கடந்த 3 ஆண்டுகளாக ஆஜராகாமல் தலைமறைவாக வந்ததால், அவரை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டது.
இதையடுத்து, கொரட்டூர் காவல் ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ் தலைமையிலான தனிப்படை போலீஸார், முகமது இர்பானை பல்வேறு மாநிலங்களில் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலம், ஹமிதியில் தலைமறைவாக இருந்த வந்த முகமது இர்பானை கடந்த 20-ம் தேதி தனிப்படை போலீஸார் கைது செய்து பஞ்சாப் மாநில நீதிமன்றத்தில் ஆஜர் செய்து, நேற்று கொரட்டூர் அழைத்து வந்தனர். தொடர்ந்து முகமது இர்பானை, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தினர்.