ஆய்வாளர் சுவர்ணவள்ளி
கோவை: கோவையில் பெண் காவல் ஆய்வாளரை அரிவாளால் வெட்டியவரை போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி பிடித்தனர்.
கோவை மாநகரில் நேற்று முன்தினம் இரவு 14 வயது சிறுமியை இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீஸாருக்கு புகார் வந்தது. இதன்பேரில் அனைத்து மகளிர் தெற்கு காவல் நிலைய போலீஸார் கஞ்சிக்கோணாம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சிறுமியை அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக சந் தோஷ், தவசி ஆகிய இருவரையும் போக்சோ வழக்கில் போலீஸார் கைது செய்தனர்.
கைதான தவசியிடம் நடத்திய விசாரணையில், சிறுமியை மிரட்டுவதற்கு பயன்படுத்திய அரிவாளை மறைத்து வைத்திருக்கும் இடத்தை அடையாளம் காட்டுவதாக தெரிவித்துள்ளார். அதன்பேரில், காவல் ஆய்வாளர் சுவர்ணவள்ளி தலைமையிலான போலீஸார் உடன் சென்றனர். அப்போது மறைத்து வைத்திருந்த அரிவாளை திடீரென எடுத்த தவசி, ஆய்வாளர் சுவர்ணவள்ளியை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோட முயன்றார்.
இதனால் தற்காப்புக்காக உதவி ஆய்வாளர் சிலம்பரசன் துப்பாக்கியால் சுட்டதில், தவசியின் இடது காலில் குண்டு பாய்ந்தது. பின்னர் அவர் கோவை அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். காயமடைந்த காவல் ஆய்வாளர் சுவர்ணவள்ளியும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.