காஞ்சிபுரம்: கொலை வழக்கில் சிறை சென்று திரும்பியவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாநகராட்சி 21-வது வார்டு அரியந்த் அவென்யூ அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் தலையில் பலத்த காயங்களுடன் ஆண் சடலம் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற காஞ்சிபுரம் தாலுகா போலீஸார், அரக்கோணம் ரயில்வே போலீஸார் ஆகியோர் உடலை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும், போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர் திருக்காலிமேடு அடுத்த நேதாஜி நகரைச் சேர்ந்த பார்த்திபன்(32) எனத் தெரிந்தது.
இவர் கடந்த 2022-ம் ஆண்டு பிரியாணி கடையில் தன்னுடன் பணிபுரிந்த ஏழுமலை என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்று, வெளியே வந்தவர் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், தீபாவளி தினத்தன்று ரயில்வே தண்டவாளம் அருகே நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில், கற்கள் மற்றும் மதுபான பாட்டில்களால் தலையில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
பார்த்திபனுடன் மது அருந்தியவர்கள் யார், முன்விரோதம் காரணமாக கொலை நடைபெற்றதா அல்லது மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்ததா என விசாரணை மேற்கொண்டுள்ளனர்.