க்ரைம்

தெலங்கானா: போக்சோ வழக்கில் ஜாமீனில் வந்த நபர் 6 பேரை கொன்ற பயங்கரம்

வெற்றி மயிலோன்

ஹைதராபாத்: தெலங்கானாவின் ரங்கா ரெட்டி மாவட்டம், ஷாபாத் பகுதியில் நேற்று (ஜூலை 10) இரவு, 35 வயது நபர் ஒருவர் தனது மனைவி, இரண்டு மகன்கள் மற்றும் தனக்கு எதிராக போக்சோ வழக்கு தொடர்ந்த 16 வயது சிறுமி, அவரது தாய் மற்றும் பாட்டி என மொத்தம் 6 பேரை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

போக்சோ வழக்கில் சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியில் வந்த ராஜ்குமார் என்பவர், நேற்று இரவு 10.45 மணியளவில் தனது கிராமத்திலிருந்து ஷாபாத் நகரில் உள்ள போக்சோ வழக்கில் தன் மீது புகாரளித்த சிறுமியின் வீட்டிற்குச் சென்றார். வீட்டில் இருந்த சிறுமியின் தாய் மற்றும் பாட்டியைக் கொன்றார். அதன்பின் அந்தச் சிறுமியை வலுக்கட்டாயமாகத் தனது காரில் ஏற்றிக்கொண்டு, தனது கிராமத்தில் உள்ள ஒரு ஏரிக்குச் சென்று, அங்கு அந்தச் சிறுமியைக் கத்தியால் குத்திக் கொன்றார்.

அதன்பின்னர் இரவு 11.21 மணிக்கு தனது வீட்டிற்குள் நுழைந்த ராஜ்குமார், அங்கு தூங்கிக்கொண்டிருந்த தனது மனைவி மற்றும் நான்கு வயது மற்றும் 18 மாதங்களே ஆன இரண்டு மகன்களின் கழுத்தை அறுத்துக் கொன்றுள்ளார். கொலைகளைச் செய்த பிறகு, ராஜ்குமார் தனது தந்தையைத் தொடர்புகொண்டு நடந்ததைக் கூறிவிட்டு, அங்கிருந்து தப்பிவிட்டார். இதுகுறித்து உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன.

ராஜ்குமார் மீது கடந்த மே 16 அன்று போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் மே 26 அன்று கைது செய்யப்பட்டு, சமீபத்தில் ரூ.20,000 மதிப்பிலான தனிநபர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஜாமீனில் வெளிவந்த சில நாட்களிலேயே 6 பேரை அவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

SCROLL FOR NEXT