காரப்பாக்கம்: சென்னை காரப்பாக்கம் காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ஜீவா (27) பெயிண்டர் தொழிலாளி. இவர் தனது பிறந்த நாளையொட்டி நண்பரான அரியலூரைச் சேர்ந்த ஆனந்தராஜுடன் மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. பின்னர் இருவரும் அருகிலுள்ள ஏடிஎம் முன்பு நின்று பேசிக்கொண்டிருந்த போது வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறிய நிலையில், மதுபோதையில் இருந்த ஆனந்தராஜ் அங்கிருந்த பெரிய கல்லை தூக்கி ஜீவாவின் தலையில் போட்டதாக கூறப்படுகிறது.
இதில் ஜீவா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கண்ணகி நகர் போலீஸார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை சம்பவத்தில் தொடர்புடைய ஆனந்தராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.