ஆவடி: அம்பத்தூரில் ரூ.16.10 லட்சம் கடனுக்காக வியாபாரியிடம் ரூ.1.15 கோடி வசூலித்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை, அம்பத்தூர், திருவேங்கடம் நகரைச் சேர்ந்தவர் நடராஜன். ‘டைல்ஸ்’ விற்பனை செய்யும் கடை நடத்தி வந்த இவர், தனது தொழில் தேவைக்காக, வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்த வந்த மணிகண்டபுரம் காளிமுத்து (46) என்பவரிடம் கடந்த 2018-ம் ஆண்டு ரூ.16.10 லட்சம் கடன் வாங்கியுள்ளார்.
அப்போது, நடராஜனிடம் இருந்து கையெழுத்திட்ட தேதி, பெயர், தொகை நிரப்பப்படாத புரோ நோட், 6 வங்கி காசோலைகள், 3 ஸ்டாம்ப் பேப்பர்களை காளிமுத்து பெற்றுள்ளார்.
பிறகு நடராஜன், தான் வாங்கிய கடனை முறையாக வட்டியுடன் திருப்பி செலுத்தி வந்த நிலையில், காளிமுத்து வட்டிக்கு மேல் வட்டி போட்டு வந்ததாக கூறப்படுகிறது.
அந்த வகையில், காளிமுத்து கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2025-ம் ஆண்டு வரை நடராஜனை மிரட்டியும், அடித்தும் பல தவணைகளாக ரூ. 1,15,02,800-ஐ பெற்றுள்ளார்.
இச்சூழலில், மேலும் ரூ.90 லட்சம் கொடுக்க வேண்டும் என்று கூறி நடராஜனுக்கு தொடர்ந்து காளிமுத்து கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த நடராஜன், காளிமுத்து மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, தனது பணத்தை மீட்டுத் தருமாறு சமீபத்தில் ஆவடி காவல் ஆணையர் செந்தில்குமாரிடம் புகார் அளித்தார்.
அதன்படி ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் காளிமுத்துவை நேற்று முன்தினம் கைது செய்தனர்.