சென்னை: மூதாட்டிகளிடம் தொடர்ச்சியாக நூதன முறையில் நகை திருட்டில் ஈடுபட்டு வந்த நபர் கைது செய்யப்பட்டார். சென்னை சூளை, ஆண்டியப்பன் நாயக்கன் தெருவைச் சேர்ந்தவர் மூதாட்டி காளியம்மாள் (76).
கடந்த 17-ம் தேதி காலை சூளை, வி.வி.கோவில் அருகே உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மாத்திரைகள் வாங்க சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த 50 வயதுடைய ஆண் ஒருவர், காளியம்மாவிடம் நலம் விசாரித்து, இது ரமலான் மாதம் என்பதால் ஏழை மக்களுக்கு தொழில் அதிபர் ஒருவர் நகை மற்றும் பணம் கொடுக்கிறார் என நம்பிக்கையுடன் பேச்சு கொடுத்தார்.
இதை உண்மை என நம்பிய மூதாட்டி, தன்னை அங்கு அழைத்துச் செல்லும்படி கூறினார். இதையடுத்து, அந்த நபர் சற்று தொலைவுக்கு அழைத்துச் சென்று, ஒரு பூட்டிய கடையின் அருகே அமர வைத்து, ‘ஏழைகளுக்கு மட்டுமே தொழில் அதிபர் நகை, பணம் கொடுக்கிறார்.
எனவே, நீங்கள் இப்படி நகை அணிந்து வந்தால் அந்த உதவி கிடைக்காது. எனவே, உங்களது நகைகளை கழட்டி கொடுங்கள், நான் வைத்துக் கொள்கிறேன். நலத்திட்ட உதவி கிடைத்த உடன் உங்களது நகைகளை திரும்ப கொடுத்து விடுகிறேன் என தெரிவித்துள்ளார்.
இதை உண்மை என நம்பிய மூதாட்டி காளியம்மாள், தனது கம்மல் மற்றும் மோதிரத்தை கழற்றி கொடுத்தார். அதை பெற்றுக் கொண்ட அந்த நபர், இங்கேயே சிறிது நேரம் இருங்கள்.
அங்கு கூட்டம் எவ்வளவு உள்ளது என பார்த்து விட்டு வருகிறேன் என சென்றவர் மீண்டும் திரும்பி வரவில்லை. நீண்ட நேரமாகியும் அந்த நபர் வராததால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த காளியம்மாள் இது தொடர்பாக வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
இதில், நூதன முறையில் மூதாட்டியிடம் நகைகளை திருடியது சென்னை டி.பி சத்திரத்தைச் சேர்ந்த திருமலை (50) என்பது தெரிந்தது. தலைமறைவாக இருந்த அவரை போலீஸார் கைது செய்தனர்.
அவரிடமிருந்து 9 கிராம் எடை கொண்ட தங்க கம்மல் மீட்கப்பட்டது. விசாரணையில், திருமலை கடந்த 16-ம் தேதி இதே போல திருவிக நகர் பகுதியில் ஒரு மூதாட்டியை ஏமாற்றி தங்க நகை திருடிச் சென்றதும், இதே பாணியில் அவர் பல மூதாட்டிகளிடம் கைவரிசை காட்டி இருந்ததும் தெரிய வந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.