கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த வல்லாஞ்சேரியைச் சேர்ந்தவர் மலையரசன் (42). இவர் அப்பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார்.
கடந்த 16-ம் தேதி இரவு 11.45 மணிக்கு குடும்பத்துடன் சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் இருந்து காரில் வந்தார். ஓட்டல் முன்பு காரை நிறுத்திவிட்டு, காருக்குள் தூங்கிக் கொண்டிருந்த தனது 12 வயது மகளின் தூக்கம் கலைந்துவிடக்கூடாது என்பதற்காக ஏசியை இயக்கியபடியே மனைவியுடன் ஓட்டலுக்குள் சென்றார்.
அப்போது அங்கு வந்த மர்ம நபர் காரை ஓட்டிச் சென்றார். காருக்குள் மகள் இருப்பதை அறிந்த மலையரசன் அதிர்ச்சியடைந்து கூடுவாஞ்சேரி போலீஸில் புகார் அளித்தார். போலீஸார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து காரை தேடினர்.
சீர்காழி பேருந்து நிலையம் அருகே காரை நிறுத்திவிட்டு மர்ம நபர் டீ குடிக்கச் சென்றுள்ளார். அப்போது கண்விழித்த சிறுமி, பெற்றோர் இல்லாததைக் கண்டு காரிலிருந்து இறங்கி அழுதபடி ஆட்டோ ஓட்டுநர்களிடம் உதவி கேட்டார்.
அவர்கள் அளித்த தகவலின்பேரில் வந்த சீர்காழி போலீஸார் சிறுமியை மீட்டு, கூடுவாஞ்சேரி போலீஸாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் பெற்றோரிடம் சிறுமி பத்திரமாக ஒப்படைக்கப்பட்டார்.
இதற்கிடையில், இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் கடலூர் மாவட்டத்தில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். குறிஞ்சிப்பாடி அருகே குண்டியமல்லூர் கிராமத்தில் திருடப்பட்ட கார் நிறுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது.
அங்கு விசாரணை நடத்திய போலீஸார், அய்யந்தூர் ஏரிக்கரை அருகே பேருந்து ஏறச் சென்ற நபரை மடக்கிப் பிடித்தனர்.
விசாரணையில் அவர் சின்ன காரைக்காடு பகுதியைச் சேர்ந்த ராஜ்மோகன் (42) என்பது தெரியவந்தது. அவரை போலீஸார் கைது செய்தனர். காரில் பல்வேறு ஊர்களுக்குச் சுற்றிப் பார்க்கும் ஆசையில் அதை எடுத்துச் சென்றதாக ராஜ்மோகன் கூறியுள்ளார்.