கைதான சரவணன்
பூந்தமல்லி: திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு அருகே மேல் அயனம்பாக்கம், சந்திரமவுலீஸ்வரர் கோயில் தெருவில் உள்ள தரைக் கிணற்றில் அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கடந்த 22-ம் தேதி மிதந்து கொண்டிருந்தது. தகவலறிந்த திருவேற்காடு போலீஸார் அந்த சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர்.
அதில் உயிரிழந்தவர் திருவேற்காடு- சின்ன கோலடியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி பாஸ்கர் (44) என்பதும், இவருக்கு மனைவி சந்தியா(34), 2 மகன்கள் இருப்பதும் தெரியவந்தது.
தொடர்ந்து போலீஸார், பாஸ்கர் உடலை பிரேதப் பரிசோதனைக்காக சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிறகு வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
அவ்விசாரணையில், கடந்த 20-ம் தேதி பாஸ்கரும், அவரது நண்பருமான சரவணன் (37) என்பவரும் அதே பகுதியில் உள்ள கிணற்றின் அருகில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.
அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதன் விளைவாக பாஸ்கரனை சரவணன் கிணற்றில் தள்ளிக் கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பியோடியது தெரியவந்ததாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தலைமறைவாக இருந்த சரவணனை போலீஸார் நேற்று கைது செய்தனர்.