வண்டலூர்: செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அடுத்த மண்ணிவாக்கம் புதுநகர் பகுதியில், ஓட்டேரி காவல் நிலையம் எதிரே வசித்து வருபவர் சூர்யா. இவரது மனைவி தீபா. இந்த தம்பதிக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இவர்களது 3 வயது மகள் கிருத்திக் ஷா நேற்று காலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வீட்டுக்குள் நுழைந்து, குழந்தையை தூக்கிச் செல்ல முயன்றுள்ளார். குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு பெற்றோர் அங்கு வந்துள்ளனர். அவர்களை அந்த நபர் கற்கள் உள்ளிட்ட பொருட்களை காட்டி மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பெற்றோர் சத்தமிட்டுள்ளனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்த நிலையில், குழந்தையுடன் தப்பிச் செல்ல முயன்ற நபரை சுற்றிவளைத்துப் பிடித்தனர்.
தகவலின் பேரில் ஓட்டேரி போலீஸார் விரைந்து வந்து, அந்த நபரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர் தனது பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை மாற்றி மாற்றி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவரது அடையாளம் மற்றும் பின்னணி குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.