சென்னை: தொழிலதிபரை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை நெருங்கி விட்டதாக, போலீஸார் தெரிவித்துள்ளனர்.
சென்னை, புழல் அடுத்த மகாவீர் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர், மணிப்பூர் மாநிலத்தில், கம்பளிப் போர்வைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் அதிகாலை இவரது வீட்டுக்குள் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று முகமூடி அணிந்து அதிரடியாக புகுந்தது. வீட்டுக்குள் நுழைந்த அக்கும்பல், விஜயகுமார், அவரது மனைவி, மகள்கள் மற்றும் தாயார் ஆகியோரை கத்திமுனையில் மிரட்டி சிறைபிடித்தனர்.
மேலும், குடும்பத்தினர் அனைவரையும் கட்டிப்போட்டுவிட்டு, பீரோவில் இருந்த 30 பவுன் தங்க நகைகள் மற்றும் 25 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை எடுத்துக் கொண்டு, தாங்கள் கொண்டு வந்த காரில் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.
சினிமா பாணியில் நடந்த இந்த கொள்ளை குறித்து தகவல் அறிந்த புழல் காவல்துறையினர், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், குற்றவாளிகளைப் பிடிக்க 5 தனிப்படைகளை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
கொள்ளையர்கள் தப்பிச் சென்ற பாதையில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் மற்றும் அந்தப் பகுதியில் பதிவான செல்போன் சிக்னல்களை கொண்டு போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். தற்போது கிடைத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில், கொள்ளையர்களை நெருங்கிவிட்டதாகவும், இன்னும் ஓரிரு நாட்களில் குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.