அரியலூர்: இலையூர் காசி விஸ்வநாதர் கோயிலில் மரகதலிங்கத்தை திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த இலையூர் கிராமத்தில், பழமைவாய்ந்த காசி விஸ்வநாதர், காசி விசாலாட்சி கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான இக்கோயிலில், மூலவரான லிங்கம் மரகதத்திலானது. இங்கு பிரதோஷ நாள் மற்றும் சிவனுக்கு உகந்த நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிகம் காணப்படும்.
இந்நிலையில், நேற்று பிரதோஷத்தையொட்டி, லிங்கத்துக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, பூசாரி கலியபெருமாள் (81) கோயிலை பூட்டிவிட்டு, தலையருகில் சாவியை வைத்துவிட்டு, அங்கேயே படுத்து தூங்கியுள்ளார். பின்னர், இன்று காலை எழுந்து பார்த்தபோது சாவியை காணவில்லை. மேலும், கோயில் கதவு திறக்கப்பட்டு, மரகதலிங்கம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்த தகவலின்பேரில், எஸ்.பி. விஷ்வேஷ் பாலசுப்பிரமணியம் சாஸ்திரி, ஜெயங்கொண்டம் டிஎஸ்பி ரவிச்சக்கரவர்த்தி, இந்து சமய அறநிலையத் துறையின் ஜெயங்கொண்டம் செயல் அலுவலர் சிவனேயசெல்வன் உள்ளிட்டோர், கோயிலுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும், கோயில் மற்றும் அருகில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.