சென்னை: நடத்தையில் சந்தேகமடைந்து ஓய்வு பெற்ற ராணுவ ஊழியரை கொலை செய்த வழக்கில், காவலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பெரம்பூர், மதுரை சாமி மடம் தெருவை சேர்ந்த வெங்கடசாமி ராணுவத்தில் கிளார்க்காக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது வீட்டுக்கு அருகில் தனியார் நிறுவன காவலாளியாக பணியாற்றி வரும் துளசையா (54) என்பவர் வசித்து வந்தார்.
துளசையாவின் மனைவியிடம் வெங்கடசாமி அடிக்கடி பேசி வந்துள்ளார். இதை துளசையா கண்டித்துள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறு முற்றி, கடந்த 2024 அக்.11-ம் தேதி வெங்கடசாமியை கத்தியால் துளசையா வெட்டினார். இதில் படுகாயமடைந்த வெங்கடசாமி, சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக, திருவிக நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து துளசையாவை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பாக நடந்தது.
காவல்துறை தரப்பில் மாநகர குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன் ஆஜராகி, கொலை சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் உள்ளதாகவும், மரணத்துக்கு நடத்தையில் ஏற்பட்ட சந்தேகமும், கத்தியால் ஏற்பட்ட வெட்டுக்காயமும் தான் காரணம் என வாதிட்டார்.
அதையடுத்து நீதிபதி, காவல்துறை தரப்பில் கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால், குற்றம் சாட்டப்பட்ட துளசையாவுக்கு ஆயுள் தண்டனை, ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.