கொடைக்கானலில் கொலை செய்யப்பட்ட தொழிலதிபர் சூர்யநாராயணன்.
திண்டுக்கல்: கொடைக்கானலில் தொழிலதிபரும். நடிகையின் தந்தையுமான சூர்யநாராயணன் என்பவரை கொலை செய்துவிட்டு தப்பியோடிய கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் சூரியநாராயணன் (73). இவருக்கு திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோயில் அருகே சொந்தமான தங்கும் விடுதி உள்ளது.
இந்த தங்கும் விடுதியில் கோயம்புத்தூரை சேர்ந்த ஐந்து இளைஞர்கள் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அறை எடுத்து தங்கியுள்ளனர்.
நேற்று முன்தினம் மாலை சூரியநாராயணனின் தங்கும் விடுதியில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்களது வேலைகளை முடித்துவிட்டு வெளியேறியுள்ளனர்.
தங்கும் விடுதியில் சூரியநாராயணன் மற்றும் அவரது உதவியாளர் ஆறுமுகம், முரளி ஆகிய இருவர் மட்டும் உடன் இருந்துள்ளனர். இதனை நோட்டமிட்ட விடுதியில் தங்கியிருந்த ஐந்து பேர், உதவிக்கு இருந்த இருவரையும் கயிற்றால் கட்டிப்போட்டுவிட்டு, அங்கிருந்த சூர்யநாராயணனையும் நாற்காலியில் கட்டிப்போட்டு வாய், மூக்கு உள்ளிட்ட பகுதியில் டேப்பால் சுற்றி மூச்சுவிடமுடியாத அளவிற்கு செய்து கொலை செய்துவிட்டு தப்பியுள்ளனர்.
இதில் கயிற்றால் கட்டப்பட்ட இருவரில் ஒருவர் கயிற்றை அவிழ்த்துக்கொண்டு விடுதியில் இருந்து வெளியே வந்து கூச்சலிட்டு நடந்த நிகழ்வுகளை கூறியுள்ளார். அப்பகுதியில் இருந்தவர்கள் கொடைக்கானல் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
விடுதிக்கு வந்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அங்கிருந்த முக்கிய ஆவணங்கள் மற்றும் சிசிடிவியின் ஹார்ட்டிஸ்க், அலைபேசி ஆகியவற்றை எடுத்துச்சென்றதாக தெரியவந்துள்ளது.
மோப்ப நாய், தடயஅறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. தப்பியோடிய குற்றவாளிகளை தேடும் பணியில் கொடைக்கானல் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 2018 ஆண்டு ‘மாயாவி’ திரைப்படத்தில் ஊனமுற்ற பெண்ணாக நடித்த நடிகை விஷ்ணுபிரியாவின் தந்தை தொழிலதிபர் சூர்யாநாராயணன். இவரது, மகள் காதல் விவகாரத்தில், வாகன ஓட்டுநரை கூலிப்படை ஏவி கொலை செய்த வழக்கு சூர்யநாராயணன் மீது நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
முன்பகை காரணமாக இந்த கொலை நடைபெற்று இருக்கலாம் என கொடைக்கானல் போலீஸார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.