ஆனைமலை தடை செய்யப்பட்ட 5900 லாட்டரி சீட்டுகளை போலீஸார் பறிமுதல் 6 பேரை கைது செய்தனர்.

 
க்ரைம்

ஆனைமலை அருகே தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டுகள் பறிமுதல்: 6 பேர் கைது

எஸ்.கோபு

ஆனைமலை: ஆனைமலை அருகே தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டுகளை பதுக்கி வைத்திருந்த 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் கவுதம் (34) இவர் கேரளம் மீனாட்சிபுரம் பகுதியில், லாட்டரி சீட்டு கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை பதுக்கி வைத்திருந்து வாட்ஸ்-அப் வாயிலாக விற்பனை செய்து வருவதாக கோவை மாவட்ட எஸ்.பி.பவன்குமார் ரெட்டிக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து எஸ்.பி. உத்தரவின் பேரில் ஆனைமலை காவல் ஆய்வாளர் சத்தியசீலன் தலைமையில் காவலர்கள் இன்று கவுதம் வீட்டில் நடத்திய சோதனையில், 5,900 கேரள மாநில லாட்டரி சீட்டுகள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்த போலீஸார், கவுதம் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த உறவினர்கள் ஜெயசவுந்தரயன் (32), ஜீவானந்தம் (26), மற்றும் 3 பெண்கள் உள்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்ததுடன் அவர்களை கைதும் செய்தனர்.

இது குறித்து போலீஸார் கூறியதாவது: “ஆனைமலை பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, கவுதம் மற்றும் அவரது உறவினர்கள் கேரளம் மாநிலத்தின் ஓணம் பம்பர் லாட்டரிகளை புகைப்படம் எடுத்து வாட்ஸ்-அப் வாயிலாக வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி ஆன்லைன் வாயிலாக பணத்தைப் பெற்று வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களைக் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.2.5 லட்சம் மதிப்பிலான லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்துள்ளோம். மேலும், அவர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது” என்றனர்.

SCROLL FOR NEXT