கோப்புப்படம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் - சோமங்கலம் அருகே தனியார் வங்கியின் ஏடிஎம் மையத்தில் உள்ள இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
சோமங்கலம் அருகே உள்ள புதுப்பேர் பகுதியில் அமைந்துள்ள அந்த ஏடிஎம் மையத்தில், நள்ளிரவு நேரத்தில் கேஸ் வெல்டிங் இயந்திரத்தை கொண்டு, ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையர்கள் கைவரிசை.
இந்த கொள்ளையின் போது ஏடிஎம் மையத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களுக்கு ஸ்பிரே பெயிண்ட் அடித்தும், எச்சரிக்கை ஒலி எழுப்பும் அலாரத்தின் இணைப்பையும் கொள்ளையர்கள் துண்டித்ததாக தகவல். கொள்ளை சம்பவத்துக்கு பிறகு கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பினர்.
இது குறித்து வங்கி நிர்வாகத்தின் தரப்பில் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவல் கிடைத்ததும் போலீஸார் சம்பவம் நடந்த ஏடிஎம் மையத்தில் முதற்கட்ட விசாரணையை மேற்கொண்டனர். கொள்ளையர்களை பிடிக்க காவல் துறை இரண்டு தனிப்படை அமைத்துள்ளது.
முதற்கட்ட தகவலின் படி கொள்ளை நடந்த ஏடிஎம் இயந்திரத்தில் எவ்வளவு பணம் இருப்பு வைக்கப்பட்டது என்ற தகவல் வங்கி அதிகாரிகள் ஆய்வுக்கு பின்னரே அதிகாரபூர்வமாக தெரியவரும் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.